கார்பரேட் உலகம்
உண்மையை உரக்கசொல்லும் உழவனின் கவிதை...
தாய்மாமனாய் இருக்கவேண்டிய
தங்கை மகள் காதணி விழா
உடன்பிறந்தவனாய் முன் நிற்கவேண்டிய
சித்தி மகள் திருமணவிழா
மஞ்சள் நீரூற்றி விளையாடும்
அம்மன் கோவில் பொங்கல் விழா
கட்டிப்பிடித்து அழுததுபோக
கண்துடைத்து ஆறுதல் சொல்லவேண்டிய
பள்ளித் தோழனின் தந்தை மரணம் .......
இப்படி எத்தனையோ
நல்லவை கெட்டவைகளுக்குப்
போகமுடியாமல் போனது!
மரணமும் ஜனனமும் கூட
வார இறுதிகளில் மட்டுமே
வரட்டுமென மனம் வேண்டினாலும்
ஆச்சரியப்பட ஒன்றுமில்லை
இந்தக்
கார்பரேட் உலகில்!
உழவன்
நன்றி! V.சுரேஷ்
********************************************************************
சுதந்திர தின கவிதை
நான் ரசித்த "இவண் தமிழன்" கவிதை உங்கள் கவனத்திற்கு ,
பருந்திற்கு தன் குஞ்சு இன்று இரையாகப் போகிறது என்பதை அறியாமல் தன் குஞ்சிற்கு இரைதேடி செல்கிறது தாய்க்குருவி !
"தாய்க்குருவி என் தாய்நாடு, தீவிரவாதம், மதக்கலவரம், பட்டினிச்சாவு, ஊழர்போர், பயங்கரவாதம் - அவள் கொண்டாடும் பிள்ளைகளை கொண்டாடும் பிணிகள் !"
அர்த்தநாரீஸ்வரரின் ஆளுகைதான் இங்கு எங்கும் தலைவிரித்து ஆடுகிறதோ என்று எண்ண தோன்றுகிறது. "மேல் தட்டு மன்னர் - அடித்தட்டு மக்கள் விண்வெளி வெள்ளோட்டம் - வயல்வெளி வெள்ள ஓட்டம் வெள்ளம் - வறட்சி" இன்னும் பட்டியல் ஏராளம், 2020-ல் இந்தியா ? இந்திய தேசம் வல்லரசு ஆகிவிடலாம், ஆனால் என் இனத் தமிழன் அன்றும் ஏர்பூட்டி வயர்க்காட்டிற்குத்தான் நடந்து கொண்டிருப்பான் . "அவன் அடுத்த வேலை சோற்றுக்கு !"
"அவன் கண்டவையோ ஏராளம், வறட்சியில் பட்டினிச்சாவு, வெள்ளத்தில் பொட்டலச்சோறு, அழுகிய பயிர்கள்,உணவிற்கு எலிக்கறி, இன்னும் எத்தனையோ ! " எல்லாவற்றையும் தாண்டி,
அவன் தன் வாழ்க்கையை தொடங்கிய தொலைவிலேதான் இன்றும் இருக்கிறான், முன்னேற்றம் இன்றி ! "தமிழகத்தின் மீது சோக ரேகைகள் இன்றும் படர்ந்து கொண்டுதான் இருக்கின்றன - வறண்ட நதிகளாய் ! "இந்தியா முன்னேறுகிறது ?
ஆம் இந்தியா முன்னேறுகிறது. "மென்பொருள் தயாரிக்கும் இந்தியனுக்கோ
மாதத்திற்கு பல லகரங்கள், உணவுப்பொருள் உற்பத்தியாக்கும் இந்தியனுக்கு ? வருடந்தோறும் அரசாங்கம் தரும் இழப்பீட்டு தொகைதான் - அவன் வருட வருமானமோ ? ....."
"உழவனின் அரிசி எண்ண
அற்பமாகிவிட்டதா ? மறந்துவிட்டாயா மனிதனே, உன் இறப்பிலும் கூடவருவது வாய்க்கரிசிதான் ! "
தோழனே, நம் நாடு 2020-ல் வல்லரசாகிவிடும், அதில் ஐயமில்லை - அன்று நம் உழவுத்தோழனை சிற்றரசனாக்க வேண்டாம், ஒரு சராசரி மனிதனாகவாவது அவன் களிப்பாக வாழட்டுமே ?
"வாள் முனையினும் வலியது பேனாமுனை.
அதனினும் வலியது - என் இனத் தமிழனின் ஏர்முனை!" சிந்திப்போம் ! உயர்த்துவோம் !
நன்றி - இவண் தமிழன்