Jun 17, 2012

காதலித்தால் நினைவாற்றல் அதிகரிக்கு​மாம்-ஆய்வி​ல் தகவல்

காதலிப்பவர்களுக்கு கண் தெரியாது என்பது முட்டாள்களின் வாதம் என்று அதிரவைக்கின்றனர் ஆய்வாளர்கள். காதலில் விழுந்தவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்குமாம் அதற்கான ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும் என்று கூறி காதலர்களின் வாழ்வில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றனர் ஆய்வாளர்கள்.
கண்ட உடனே காதலில் விழுபவர்கள் சிலர். பேசி பழகிய பின் காதலிப்பவர்கள் சிலர் காதலில் விழுந்துவிட்டால் அவர்களுக்கு இறக்கை முளைத்துவிடும். கண்களை திறந்து கொண்டே காதலிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்கின்றனர் நிபுணர்கள். காதலிக்க ஆரம்பித்த உடன் அவர்களின் உடலில் நிகழும் ரசாயன மாற்றம் என்னென்ன என்று நிபுணர்கள் பட்டியிலிட்டுள்ளனர். நீங்களும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்.

பட்டாம்பூச்சி பறக்கும்
உங்களுக்கான நபரை நீங்கள் கண்ட உடன் மச்சி இவதாண்ட உன் ஆளு என்று மூளை மணியடிக்க ஆரம்பித்து விடுமாம் ( அப்படியா?) அப்போது மூளையில் டோபமைன் எனப்படும் ரசாயனம் சுரக்குமாம். அது உடலுக்கு சக்தியை தருவதோடு மூளையையும் சுறுசுறுப்பாக்குகிறதாம். அதனால்தான் காதலிப்பவர்களின் கனவுகளில் வானவில் வருகிறது. அவர்களுக்கு இறக்கை முளைக்கிறது. அவர்கள் செல்லும் இடமெங்கும் வண்ணத்துப்பூச்சி சிறகடிக்கிறது. ( இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள பழைய பாரதிராஜா படத்தை பார்க்கலாம்)

உடல் மெருகேறும்
காதலிப்பவர்கள் உடல் கட்டுப்பாட்டோடு அழகாக இருக்குமாம். அவர்களின் உடலில் ஆட்டோமேடிக்காக neurotransmitter அதிகரிக்குமாம். அட்ரீனலின் உற்பத்தி சிறிதளவு குறையுமாம். அதனால் அவர்களுக்கு பசி உணர்வே ஏற்படுவதில்லை. ஜிம் போகாமலேயே உடலில், முகத்தில் ஒரு பளபளப்பு ஏறியிருக்குமாம். அதனால் காதலில் விழுந்தவர்களை பையன் ஒரு மார்க்கமாவே இருக்கான் என்னன்னு கவனிங்க என்று அப்பா, அம்மாவிடம் உறவினர்கள் உசுப்பேற்றி விடுகின்றனர்.

புத்திசாலியாவார்கள்
காதலிப்பவர்கள் முட்டாள்களா? யார் சொன்னது. அப்படி சொல்பவர்கள்தான் முட்டாள்கள், காதலின் அருமை தெரியாதவர்கள். காதல் உண்மையிலேயே முட்டாளாக இருப்பவர்களைக் கூட அறிவாளியாக்குமாம். காதல் வசப்பட்டவர்களுக்கு மூளை செல்களை புதிதாக வளரச் செய்யும் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது என்று இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இளமை திரும்பும்
காதலிப்பவர்களுக்கு முதுமை ஏற்படாதாம். அவர்கள் என்றைக்கும் இளமையாக இருப்பார்களாம். அந்த அளவிற்கு அவர்களுக்கு இளமையை தக்கவைக்கும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன் சுரக்குமாம். காதலிப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பதால் அவர்களுக்கு கவலை என்பதே ஏற்படாதாம்.

நோய் தாக்காது
காதலிப்பவர்களை விட ஜோடி கிடைக்காமல் தனியாக இருப்பவர்கள்தான் விரைவில் மரணத்தை தழுவுகின்றனராம். காதலிப்பவர்களுக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாதாம். ரொமான்ஸ் மூடில் இருப்பவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் சுரப்பு குறைவாகத்தான் சுரக்குமாம். காதலிப்பவர்களுக்கு இதயநோய் என்பதே ஏற்படாதாம்.

Jun 14, 2012

நூற்றாண்டின் இறுதியில் பூமியின் நிலைமை தலைகீழாகிவிடும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

வாசிங்டன்: நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி பரப்பானது நேற்று இருந்தது போல் இன்றில்லை. இன்று இருப்பது போல் நாளை இல்லை என்ற நிலையில் புதுப்புது மாற்றங்களால் நிறைந்து கொண்டே போகிறது.. இந்த மாற்றங்கள் ரசிப்புக்குரியதோ வியப்புக்குரியதோ அல்ல... இந்த பூமிப் பந்தானது பெரும் பிரளயத்தை நோக்கிச் சென்று கொண்டே இருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான் இது என்கிறது அறிவியல் உலகம்...
பெருகி வரும் மக்கள் தொகையால் நீர், வனம் மற்றும் விளைநிலங்களின் பயன்பாடு என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இதன் விளைவுதான் இந்த நூற்றாண்டின் இறுதியில் பூமிப் பந்தானது பெரும் பிரளயத்தை எதிர்கொள்ளப் போகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
சுமார் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப்பாறைகள் போன்றவை இல்லாத ஒரு உலகம் இருந்த நிலையை நோக்கி இப்பொழுது நகர்ந்து கொண்டிருப்பதாகவும் நூற்றாண்டின் இறுதியில் அனேகமாக பூமியின் அமைவிடமே விசித்திரத்துக்குரியதாகவும் இருந்துவிடும் என்றும் அமெரிக்காவின் கலிபோனியா விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
இவர்கள் மட்டுமல்ல.. புவி வெப்பமயமாதல் மற்றும் சூழலியல் தொடர்பான விஞ்ஞானிகள் பலரும் இன்னும் அதிர்ச்சியூட்டும் ஆருடங்களை வெளியிட்டு வருகின்றனர். நம் கண்கூடே நேற்று நாம் பார்த்த பறைவியினங்களும் தாவர இனங்களும் காட்சிப் பொருளாகிவிட்ட நிலையில் இனிவரும் காலங்களும் இப்படித்தான் இருக்குமாம்! பல விலங்கினங்கள், தாவர இனங்கள் பூண்டோடு அழிந்து போவது மட்டுமல்ல.. புதிய புதிய விலங்கினங்களும் தாவர இனங்களும் விஸ்வரூபமாக பிறப்பெடுத்து பேரிடர்களுக்கு வழிவகை செய்யக் கூடிய சாத்தியங்களும் இருக்கின்றனவாம்.
நாம் இப்பொழுது பனிப்பாறைகளின் கடைசி யுகத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.. இன்னும் சிறிதுகாலம்தான்... பனிப்பாறைகள் இல்லாத ஒரு உலகம் உருவாகிவிடக் கூடும். தொழில்துறை வளர்ச்சியினால் வளிமண்டத்தில் 35 விழுக்காடு அளவுக்கு கரியமில வாயுவை செலுத்தியிருப்பதும் இதற்கு முக்கிய காரணமாக சொல்லலாம்..
பூமிப்பரப்பில் இப்பொழுது 43 விழுக்காடு பரப்பானது நகரங்களாகவும் விளைநிலங்களாகவும் மாற்றப்பட்டுவிட்டது. பனிப்பிரதேசத்தின் பரப்பளவு 30 சதவீதமாக இருக்கிறது. எஞ்சிய நிலப்பரப்பும் பெருகிவரும் மக்கள் தொகையால் நிச்சயம் வேட்டையாடப்பட்டு பூமிப் பந்து பிரளயத்தை எதிர்நோக்கலாம்.
மாற்றம் என்பது மட்டுமே இந்த பூமிப் பந்தில் மாறாதது என்கிறபோது மனிதர்களும் இன்ன பிற உயிரினங்களும் தாவரங்களும் மாறிக்கொண்டே இருப்பதும் கூட புதியதோர் உலகுதானோ?

To read more like this click here

வைரத்தால் ஆன 'கிரிஸ்டல் கிரகம்' கண்டுபிடிப்பு!

சிட்னி: வைரத்தால் ஆன ஒரு கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மாபெரும் நட்சத்திரங்கள் தங்களது எரி சக்தி அனைத்தையும் இழந்து, சுருங்கும்போது பல்ஸார்கள் எனப்படும் ஒலியை வெளிப்படுத்தும் சிறிய நியூட்ரான் நட்சத்திரங்களாக மாறும். இந்த பல்ஸார்கள் பெரும்பாலும் தனித்தே காணப்படும்.

சில நேரங்களில் கிரகங்களுடன் கூடிய சில பல்ஸார்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் ஆஸ்திரேலியாவின் நியூ செளத் வேல்ஸ் பகுதியில் உள்ள பார்க்ஸ் ரேடியோ டெலஸ்கோப் விண்வெளி ஆய்வு மையத்தை் சேர்ந்த விஞ்ஞானிகள், புதிய பல்ஸார் ஒன்றை கண்டுபிடித்தனர். இதற்கு PSR J1719-1438 என பெயரிடப்பட்டுள்ளது.

பூமியிலிருந்து 4,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் இந்த பல்ஸார் நட்சத்திரத்தைச் ஒரு கிரகமும் சுற்றி வருகிறது.

இது போன்ற கிரகங்கள் பெரும்பாலும் ஹைட்ரஜன் அல்லது ஹீலியத்தால் ஆனவையாக வெறும் வாயு கிரகங்களாக இருக்கும்.

ஆனால், இந்த கிரகம் கார்பன், ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் அழுத்தமும், நிறையும் நினைக்க முடியாத அளவுக்கு மிக மிக அதிகமாக உள்ளதால், அங்குள்ள கார்பன் இறுகி வைரம் அல்லது கிரிஸ்டல் போன்ற நிலையில் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இதனால் அந்த கிரகமே, இதுவரை நாம் கற்பனை செய்து பார்த்திராக வகையில் வைரம் அல்லது கிரிஸ்டல்களாக ஜொலித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்த கிரகம் அந்த பல்ஸாரை சுற்றி வருவதோடு, ஒரு நிமிடத்துக்கு நூற்றுக்கும் அதிகமான முறை தன்னைத் தானே சுற்றிக் கொண்டும் உள்ளது. இது 60,000 கி.மீ. விட்டம் (diameter) கொண்டுள்ளது.





To read more like this click here 

பூம்பாவையை உயிர்ப்பித்த திருஞானசம்பந்தர்

ஆதிகாலம் முதலே மனிதர்கள் பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று, ஆகியவற்றை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். நாளடைவில் இயற்கையோடு இணைந்த மரங்களையும் தெய்வமாக வழிபடத் தொடங்கினர்.

தொன்று தொட்டுவரும் இந்த வழக்கம் தற்போது ஸ்தல விருட்சங்கள் வடிவில் தொடர்கிறது. இந்து ஆலயங்களில் ஸ்தல விருட்சம் என்று ஒன்று இருப்பதன் நோக்கமே மரங்களை வழிபட வேண்டும் என்பதனால்தான். வேம்பு, அரசு, போன்ற மரங்களின் வரிசையில் புன்னைமரத்திற்கு மிகச்சிறந்த இடம் உண்டு.

புன்னை மரம் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் அதிகம் காணப்படுகின்றன. குறிஞ்சிப்பாட்டில் ' கடியிரும் புன்னை " எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்திணைக் கருப்பொருளைக் கூற வந்த இறையனாரின் அகப்பொருள் நூல் ' நெய்தல் தினைக்கு மரம் புன்னையும், ஞாலழும் கண்டலும் " என்று குறிப்பிடுகிறது.

ஐங்குறுநூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, கலித்தொகை, ஆகியவற்றிலும் சிறப்பித்து பாடப்பெற்றுள்ளது. சங்க இலக்கியத்தில் தலைவனோடு உரையாடும் தலைவி, அருகில் புன்னைமரம் இருப்பது கண்டு நாணப்பட்டாள். தலைவன் அவளை ஏன் நாணம் கொண்டாய் என்று கேட்க, அம்மரமோ எனக்குச் சகோதரி முறை வேண்டும் என்கிறாள். குடும்பத்தில் ஒருவராக மரத்தை பாவிக்கும் வழக்கம் அன்றைக்கு இருந்துள்ளது.

ஸ்தல விருட்சம்

புன்னை மரத்தை ஸ்தல விருட்சமாகக் கொண்ட ஆலயங்கள் தமிழகத்தில் பல உள்ளன. கும்பகோணம் அருகில் திருப்புறம்பயம், திருப்புள்ளபூதங்குடி, திருவாரூருக்கு அருகில் உள்ள திருப்புகலூர், திருநெல்வேலிக்கு அருகில் உள்ள சங்கரன்கோவில், சென்னை திருமயிலை உள்ளிட்ட ஸ்தலங்களின் விருட்சமாக புன்னை மரம் உள்ளது.

“ மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய். "

இந்தப்பாடல் திருமயிலை கபாலீஸ்வரரை நினைத்து திருஞான சம்பந்தர் பாடிய பாடலாகும்.

கபாலீஸ்வரம்

திருமயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தின் வடக்கு வெளிப் பிரகாரத்தில் தலவிருட்சம் புன்னை மரமும் அதன் அருகில் புன்னைவனநாதர் சந்நிதியும் உள்ளது. அம்பிகை இத்தலத்தில் சிவனை வேண்டி தவமிருந்தபோது, சுவாமி அவளுக்கு புன்னை மரத்தின் அடியில் காட்சி கொடுத்தார் என்பது வரலாறு. புன்னைவனநாதர் சந்நிதிக்குப் பின்புறம் ஒரு பாணத்தின் மத்தியில் சிவலிங்கம் ஒன்று புடைப்புச்சிற்பமாக இருக்கிறது.

சிவநேசரின் ஆசை

திருமயிலை தலத்தில் சிவநேசர் என்பவர் வாழ்ந்து வந்தார். சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தியுடைய அவருக்கு பூம்பாவை என்ற ஒரு மகள் இருந்தாள். திருஞானசம்பந்தரைப் பற்றியும் அவரின் சைவ சமய தொண்டினைப் பற்றியும் கேள்விப்பட்ட சிவநேசர் தன் மகள் பூம்பாவையை சம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார்.

அவ்வாறு இருக்கையில் ஒரு சமயம் பூம்பாவை தோட்டத்தில் தன் தோழிகளுடன் மலர் பறித்துக் கொண்டு இருந்த போது பாம்பு தீண்டி இறந்து விடுகிறாள். மகள் இறந்து விட்ட போதிலும் அவள் சம்பந்தருக்கு உரியவள் என்ற எண்ணம் சிவநேசருக்கு வர மகளின் அஸ்தி மற்றும் எலும்புகளை ஒரு குடத்திலிட்டு கன்னி மாடத்தில் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தார்.

உயிர்பிழைத்த பூம்பாவாய்

திருவொற்றியூர் வந்த சம்பந்தரைச் சந்தித்த சிவநேசர் அவரை வலம் வந்து தொழுதார். கன்னி மாடத்தில் வைத்திருந்த குடத்தைக் கொண்டு வந்து சம்பந்தர் முன் வைத்து பூம்பாவை பற்றிய விபரங்களைச் சொல்லி அழுதார். சம்பந்தர் திருமயிலை கபாலீஸ்வரரை தியானித்து "மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை" என்று தொடங்கும் பதிகம் பாடினார். பதிகம் பாடி முடித்ததும் குடத்தை உடைத்துக் கொண்டு வெளியே வந்த பூம்பாவை சம்பந்தரை வணங்கினாள்.

சிவநேசர் சம்பந்தரை வணங்கி பூம்பாவையை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். விஷம் தீண்டி இறந்த பூம்பாவைக்கு உயிர் கொடுத்ததின் மூலம் அவள் எனக்கு மகள் ஆகின்றாள் என்று கூறிய சம்பந்தர் சிவநேசரின் கோரிக்கையை நிராகரித்து விடுகிறார். பூம்பாவை தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து இறைவன் தொண்டு செய்து வந்தாள்.

தீர்க்காயுள் தரும் திருவிழா

இக்கோயிலின் மேற்கு கோபுரம் அருகில் பூம்பாவைக்கு சந்நிதி இருக்கிறது. அருகில் சம்பந்தர் இருக்கிறார். சம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி, பங்குனி பிரம்மோற்சவத்தின் 8ம் நாள் காலையில் நடக்கிறது. அப்போது சம்பந்தர், பூம்பாவை, சிவநேசர் மற்றும் உற்சவ மூர்த்திகள் கபாலி தீர்த்தத்திற்கு எழுந்தருள்கின்றனர்.

ஒரு கும்பத்தில் அஸ்திக்கு பதிலாக நாட்டுச்சர்க்கரை வைத்து, சம்பந்தரின் பதிகம் பாடப்படுகிறது. பின்பு பூம்பாவாய் உயிருடன் எழுந்ததை பாவனையாக செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை பார்த்தால் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.



To read more like this click here 

பூமியின் தன்மைகள் கொண்ட புதிய கிரகம்: அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

லண்டன்: பூமியை போன்ற ஒத்த தன்மைகள் கொண்ட புதிய கிரகம் ஒன்றை கலிப்போர்னியா பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சிக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்வெளித் துறை போராசிரியர் ஸ்டீவன் வோக்ட் தலைமையிலான குழுவினர், பூமியில் இருந்து மிக அருகில் உள்ள ஜிலிஸி 581 என்ற நட்சத்திரம் பற்றி ஆராய்ச்சி செய்து வந்தனர்.

அந்த ஆராய்ச்சியில் ஜிலிஸி 581 நட்சத்திரத்தை சுற்றி வரும் 2 புதிய கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர். இதில் பூமியில் இருந்து 123 திரில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு கிரகம் பூமியை போலவே ஒத்த தன்மைகளை கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள அந்த கிரகத்துக்கு ஜிலிஸி 581ஜி என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஆஸ்ட்ரோபிஸிக்கல் ஜர்னல் என்ற பத்திரிக்கையில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது,

கடந்த 11 ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சிக்கு பிறகு, ஜிலிஸி 581ஜி என்ற புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகத்தில் பூமியில் இருப்பது போலவே, நீர்ம நிலையிலான தண்ணீர் இருக்கலாம் என்று தெரிகிறது. அதன்மூலம் பூமியை போன்றே அதற்கும் சந்திரன்கள் இருக்கலாம்.

பூமியில் இருந்து 20.3 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஜிலிஸி 581 என்ற நட்சத்திரத்தை குறித்து ஆராய்ச்சியின் போது 2 புதிய கிரகங்களை ஆராய்ச்சிக் குழுவினர் கண்டுபிடித்தனர். ஜிலிஸி 581 நட்சத்திரத்தை சுற்றி வரும் 4 கிரகங்களை ஏற்கனவே ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலையில் புதிய கிரகங்களின் எண்ணிக்கையும் சேர்த்து தற்போது 6 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சூரியக் குடும்பத்தை போலவே, ஜிலிஸி 581 நட்சத்திரத்தை சுற்றிலும் உள்ள கிரகங்களுக்கும் நீள்வட்ட சுற்றுப்பாதை உள்ளது. ஜிலிஸி 581ஜி பூமியை காட்டிலும் 3 முதல் 4 மடங்கு பெரிதாக உள்ளது. மேலும் அது நட்சத்திரத்தை 37 நாட்களில் ஒருமுறை சுற்றி வருகிறது. பாறைகளாலான நிலப்பகுதியை கொண்ட இந்த கிரகத்தில் ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கலாம் என்று எதிர்ப்பார்ப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


To read more like this click here 

பூமிக்கு அருகே வந்து விட்டுப் போன விண்கல்-காண முடியாமல் நாசா ஏமாற்றம்

நாசா: பூமிக்கு அருகே, அதாவது 2 லட்சத்து 2 ஆயிரம் மைல் அருகே வந்து விட்டுப் போன பெரிய சைஸ் விண்கலத்தைக் காண காத்திருந்த நாசா விஞ்ஞானிகள், மகா இருளாக அந்த விண்கல் இருந்ததால் காண முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

அந்த விண் கல்லுக்கு 2005 ஒய்யூ 55 என்று பெயர். இந்த விண்கல்லானது, செவ்வாய்க்கிழமையன்று இரவு பூமியை நோக்கி வந்தது. இதையடுத்து விண்கல்லை ஆய்வு மேற்கொள்வதற்காக நாசா வி்ஞ்ஞானிகள் பட்டாளம் தயாராக காத்திருந்தது. ஆனால் சக்தி வாய்ந்த தொலை நோக்கிகளால் கூட பார்க்க முடியாத அளவுக்கு விண்கல் இருளாக இருந்ததால் பூமிக்கு அருகே வந்து போனதை பார்க்க முடியாமல் நாசா விஞ்ஞானிகள் ஏமாற்றமடைந்தனர்.

இந்த விண்கல்லானது, செவ்வாய்க்கிழமை இரவு, பூமியிலிருந்து 2 லட்சத்து 2 ஆயிரம் மைல்கள் அதாவது தோராயமாக மூன்றே கால் லட்சம் கிலோமீட்டர் தூரம் வரை நெருங்கி வந்தது. பூமிக்கு அருகே விண்கல் வந்ததால் அது குறித்து நிறைய தகவல்களை ஆராய முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் அது முடியாமல் போய் விட்டது.

விண்கல் பூமியை நோக்கி வந்த சமயத்தில், நிலவின் வட்டப் பாதையில் அது இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமிக்கும், நிலவுக்கும் இடையிலான தூரம் 2 லட்சத்து 39 ஆயிரம் மைல்கள் ஆகும்.

இதற்கு முன்பு பூமியை நோக்கி ஒரு விண்கல் வெகு அருகே நெருங்கி வந்தது 1976ம் ஆண்டு நடந்தது. அடுத்து 2028ம் ஆண்டு இதேபோல நடக்கும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது பூமிக்கு பக்கத்தில் வந்து போன விண்கல்லானது ஒரு ஹெலிகாப்டர் சைசிலானது. கிட்டத்தட்ட 400 மீட்டர் அகலத்தைக் கொண்டது. அட்டக் கரி நிறத்தைக் கொண்டது. இது ஒரு குறிப்பிட்ட வடிவில் நகராமல் அது இஷ்டத்திற்கு வேறு வேறு திசையில் நகர்கிறது. மிகவும் மெதுவாக நகரக் கூடியதாகவும் உள்ளது. ஒவ்வொரு 20 மணி நேரத்திற்கும் ஒருமுறைதான் இது நகருகிறது.

இதுகுறித்து நாசாவின் ஜெட் புரபல்சன் ஆய்வகத்தைச் சேர்ந்த லேன்ஸ் பென்னர் கூறுகையில், இதுவரையில் பூமிக்கு வெகு அருகே நெருங்கி வந்த ஒரு விண்கல் எது என்றால் அது இதுதான். இவ்வளவு அருகே இதுவரை எதுவும் நெருங்கி வந்ததில்லை என்றார்.

இந்த விண்கல் பூமிக்கு அருகே வந்ததால் அது குறித்த மேலும் பல விரிவான தகவல்களை ஆராய்வதற்காக நாசா விஞ்ஞானிகள் குழு கலிபோர்னியாவின் கோல்ட்ஸ்டோன் ஆய்வகத்திலும், பியூர்டரிகோவில் உள்ள அரெக்கிபோ ஆய்வகத்திலும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் விண்கல் பெரும் இருட்டாக இருந்ததால் அதை காண முடியாமல் போய் விட்டது. இந்த இரு ஆய்வகங்களிலும் சக்தி வாய்ந்த ரேடியோ தொலைநோக்கிகள் உள்ளன. ஒலிகளை அனுப்பி அதன் மூலம் இந்த விண்கல்லின் தன்மை குறித்து ஆராய திட்டமிடப்பட்டிருந்தது.

அதன் உண்மையான வடிவம், விண்கல் எதனால் ஆனது உள்ளிட்டவற்றை ஆராய காத்திருந்த விஞ்ஞானிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த விண்கல் குறித்து நாசாவைச் சேர்ந்த டான் யோமன்ஸ் என்பவர் கூறுகையில், 2005 ஒய்யூ 55 விண்கல் மிகவும் வித்தியாசமானது. இது விண்கல்லாக இருந்தாலும் கூட இது ஒரு வகையான கிரகமும் கூட. இங்கு உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும் கார்பனும் அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே மனிதர்களின் கவனத்திற்குள்ளாகியுள்ளது இந்த விண்கல் என்றார்.

இந்த விண் கல் பூமியில் விழ வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒரு வேளை இது பூமியின் நிலப்பரப்பில் விழுந்தால் 4000 மெகாடன் அளவிலான பெரும் பிரளயம் ஏற்படும். மேலும், 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக நான்கு மைல் நீளத்திற்கும், 1700 அடி ஆழத்திலும் பெரும் பள்ளம் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் பயமுறுத்துகின்றனர்.

ஒரு வேளை கடலில் விழுந்தால், விழும் இடத்தில் 70 அடி உயரத்திற்கு ராட்சத சுனாமி அலைகள் எழும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்து 2029ம் ஆண்டில் அபோசிஸ் என்ற இன்னொரு ராட்சத விண்கல் பூமியை நோக்கி வரப் போகிறதாம். இதுவும் கூட ஒய்யூ 55 போன்ற விண்கல்தான். இதனாலும் பூமிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்கிறார்கள். இந்த விண்கல் 2029ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி பூமிக்கு அருகே வந்து செல்லுமாம். பூமியிலிருந்து 29,500 கிலோமீட்டர் தொலைவுக்கு இது நெருங்கி வரும் என்பதால் விஞ்ஞானிகள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அடுத்து 2036ம் ஆண்டிலும் இதே விண்கல் பூமிக்கு அருகே வருமாம்.



To read more like this click here 



பூமியை சுற்றி வரும் 'பார்ட்-டைம்' நிலாக்கள்!

லண்டன்: பூமியை 2006ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு தாற்காலிக நிலா சுற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2006ம் ஆண்டில் ஒரு மீட்டர் நீளம் கொண்ட ஒரு விண்கல் (குறுங்கோள்) பூமியை சுற்றி வந்தது. இது ஏதாவது ஒரு ராக்கெட்டின் சிதைந்த பாகமாக இருக்கலாம் என்றே ஆரம்பத்தில் விஞ்ஞானிகள் கருதினர். ஆனால், அதை தெளிவாக ஆராய்ந்தபோது அது ஒரு விண்கல் என்பது தெரியவந்தது.

பூமியின் ஈர்ப்பு விசையால் தாற்கலிகமாக இழுக்கப்பட்டு, பூமியின் சுற்றுப் பாதைக்குள் வந்த அந்த விண்கல் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் பூமியை சுற்றிவிட்டுச் சென்றது.

இது குறித்து ஆய்வு நடத்திய அமெரிக்காவின் கார்ன்வெல் பல்கலைக்கழகத்தின் விண்ணியல் ஆராய்ச்சியாளர்கள், இது போல எத்தனையோ விண்கற்கள் பூமியை சுற்றி வருவதாகவும், பூமிக்கு ஒரு துணைக் கோள் (நிலா) தான் என்று சொல்வது தவறு என்றும் கூறுகின்றனர்.



To read more like this click here 

உருகும் ஆர்டிக் கடல்.. 2015ல் ஐஸ் மொத்தமும் காலி!

லண்டன்: பூமியில் நிலவி வரும் பருவநிலை மாற்றத்தினால் மூன்று ஆண்டுகளுக்குள் ஆர்டிக் கடலில் உள்ள ஐஸ் மொத்தமும் உருகி தண்ணீராக மாறிவிடும் என்று கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதனால் ஆர்டிக் கடல் பகுதியில் வசிக்கும் துருவக் கரடிகளும் அழிந்து விடும் அபாயம் உருவாகியுள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

2015க்குள் உருகும் ஐஸ்:

பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆய்வு செய்த பல்வேறு ஆய்வாளர்களும் ஆர்க்டிக் கடல் ஐஸ் கட்டிகள் முழுவதும் உருகுவதற்கு இன்னும் 20 ஆண்டுகள் ஆகும் என்றே குறிப்பிட்டுள்ளனர். ஆர்க்டிக் கடலில் உள்ள ஐஸ் கட்டிகள் 2030க்குள் முழுவதும் உருகும் என்று பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. கமிட்டியும் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

இதனிடையே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கடல் ஆராய்ச்சி நிபுணரான பீட்டர் வதம்ஸ் பூமியின் வட துருவத்தில் உள்ள ஆர்க்டிக் கடல் குறித்து கடந்த பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறார்.

அவரது ஆய்வில் அந்தக் கடலின் ஐஸ் கட்டிகள் முழுவதும் மிக வேகமாக உருகி வருவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஆர்க்டிக் கடல் ஐஸ் கட்டிகள் 2030வரை இருக்காது. அவை நிச்சயம் 2015க்குள் உருகிவிடும் என்று கூறியுள்ளார்.

இதனால் ஆர்க்டிக் கடலை ஒட்டியுள்ள வடக்கு ரஷ்யா, கனடா, கிரீன்லாந்து உள்ளிட்ட 4 மில்லியன் சதுர கிலோமீட்டரை சுற்றியுள்ள நாடுகள் பாதிப்பிற்குள்ளாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துருவக் கரடிகள் அழியும்:

ஆர்டிக் கடலின் ஐஸ் மொத்தமும் உருகிவிடும் பட்சத்தில் துருவக்கரடிகள் மொத்தமும் அழிந்து விடும் அபயாமும் உருவாகியுள்ளது என்றும் பேராசிரியர் வதம்ஸ் எச்சரித்துள்ளார்.


To read more like this click here