Mar 8, 2012

பாரதம்

பாரத சமுதாயம்

பாரத சமுதாயம் வாழ்கவே! - வாழ்க வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே! - ஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்க வாழ்க!

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை - வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்க வாழ்க!

மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ ? - புலனில்
வாழ்க்கை இனியுண்டோ ? - நம்மி லந்த
வாழ்க்கை இனியுண்டோ ?
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு,
கனியும் கிழங்கும் தானி யங்களும்
கணக்கின்றித் தரு நாடு - இது
கணக்கின்றித் தரு நாடு - நித்த நித்தம்
கணக்கின்றித் தரு நாடு - வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்க வாழ்க!

இனியொரு விதிசெய் வோம் - அதை
எந்த நாளும் காப்போம்,
தனியொரு வனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடு வோம் - வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்க வாழ்க!

எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்
என்றுரைத்தான் கண்ண பெருமான்,
எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம் ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் - வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்க வாழ்க!

எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்,
எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்க வாழ்க!

**********************************

எங்கள் பாரத நாடு.

பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு.

ஞானத்தி லேபர மோனத்திலே - உயர்
மானத்தி லேஅன்ன தானத்திலே
கானத்தி லேஅமு தாக நிறைந்த
கவிதையி லேஉயர் நாடு - இந்தப்
பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு.

தீரத்தி லேபடை வீரத்திலே - நெஞ்சில்
ஈரத்தி லேஉப காரத்திலே
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
தருவதி லேஉயர் நாடு - இந்தப்
பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு.

நன்மையி லேஉடல் வன்மையிலே - செல்வப்
பன்மையி லேமறத் தன்மையிலே
பொன்மயி லொத்திடும் மாதர்தம் கற்பின்
புகழினி லேஉயர் நாடு - இந்தப்
பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு.

ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே - புய
வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே
காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்
கடலினி லேஉயர் நாடு - இந்தப்
பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு.

வண்மையி லேஉளத் திண்மையிலே - மனத்
தண்மையி லேமதி நுண்மையிலே
உண்மையி லேதவ றாத புலவர்
உணர்வினி லேஉயர் நாடு - இந்தப்
பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு.

யாகத்தி லேதவ வேகத்திலே - தனி
யோகத்தி லேபல போகத்திலே
ஆகத்தி லேதெய்வ பக்திகொண் டார்தம்
அருளினி லேஉயர் நாடு - இந்தப்
பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு.

ஆற்றினி லேசுனை யூற்றினிலே - தென்றல்
காற்றினி லேமலைப் பேற்றினிலே
ஏற்றினி லேபயன் ஈந்திடுங் காலி
இனத்தினி லேஉயர் நாடு - இந்தப்
பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு.

தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே - கனி
ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே
தேட்டத்தி லேஅடங் காத நதியின்
சிறப்பினி லேஉயர் நாடு - இந்தப்
பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு.

தேட்டத்தி லேஅடங் காத நதியின்
சிறப்பினி லேஉயர் நாடு - இந்தப்
பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு.
**************************************

செந்தமிழ் நாடு

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே

வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி - என
மேவிய யாறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு

முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம்
எத்தனையுண்டு புவிமீதே - அவை
யாவும் படைத்த தமிழ்நாடு

நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
யாரம் படைத்த தமிழ்நாடு

சிங்களம் புட்பகம் சாவக - மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு

விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு

சீன மிசிரம் யவனரகம் - இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு..!!!!!